Friday, June 25, 2010

பொன்வானம் பன்னீர் தூவுது


இளையராஜாவின் இசையில், ஜானகியின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் கேட்கும் போது தேவ கானமோ என்று எண்ண வைக்கும் அளவுக்கு உள்ளத்தை ஊடுருவிச் சென்று   மனதை வருடும் தன்மையது.  தூறலாய் ஆரம்பிக்கும் இசை மெல்ல மெல்ல மனதை தூவானமாய் நனைத்து, அடை மழை போல் வேகமெடுத்து வந்ததும், பாடல் வரிகள் மீண்டும் தூவானமாய் எம் மனதில் விசிறும் ஒரு அற்புதமான அனுபவத்தை உருவாக்கும் பாடல் இது. இன்று நீ நாளை நான் என்ற படத்தில் சிவகுமாரும் லஷ்மியும் தோன்றும் பாடல் காட்சி கீழே.


Thursday, June 24, 2010

எண்ணியல் - 1எண்களுக்கும் இயற்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதைப் போலவே, எண்களுக்கும் எங்களுக்கும் - மனிதர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. இது எப்போது துவங்கியது என்று சரியாகத் தெரியாவிட்டாலும், ஆகக் குறைந்தது 30,000 வருடங்களுக்கு முதலே துவங்கி விட்டது என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது.  இந்த ஆதாரங்கள், மனிதன் சந்திரனின் நிலைகளைக் குறித்து வைக்கப் பயன்படுத்தி இருக்கலாம் என நம்பப் படுகிறது. அந்தக் காலத்தில் அவன் வியாபாரம் செய்யத் துவங்கவில்லை போல் இருக்கு.


எண்களைப் பற்றி ஆராய்ந்து எண்களுக்கும் பிரபஞ்சத்திற்கும், இயற்கைக்கும், மனிதர்களுக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி அறிவியல் ரீதியாகவோ அல்லது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படாத சோதிட ரீதியாகவோ முடிவுகளை நிறுவும் முறைமையை எண்ணியல் எனலாம் (Numerology). எங்களுக்கு எண்ணியல் என்றால் உடனே ஞாபகத்துக்கு வருவது பிறந்த திகதி, பெயர் எண் எல்லாம் வைத்து பலன்களைச் சொல்லுதலும், சிலர் அந்த எண்களுக்காக பெயரை மாற்றுவதும் ( ஏன் என்றால் பிறந்த தேதியை மாற்ற முடியாது தானே) தான் ஞாபகம் வரும். பெயர் மாற்றுவதில் பலன் இருக்கோ இல்லையோ அது எங்கள் பிரச்சினை இல்லை. 
எண்களுக்கும் எங்கள் வாழ்க்கைக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகளைப் பற்றித் தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம்.

எண்களில் உள்ள சில அதிசயமான உண்மைகளைப் பார்ப்போமா?

எட்டு எட்டா வாழ்க்கை இருக்கு தெரிஞ்சுக்கோ என்ற பாட்டு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன். ஆனா ஒரு பையனின் வாழ்க்கையில் எட்டுக்கு ரொம்ப முக்கிய தொடர்பு இருக்கு. எட்டு மாதங்களில் அவனுக்கு பாற்பற்கள் முளைக்கின்றன, எட்டு வயதில் விழுகின்றன. எட்டும் எட்டும் பதினாறு வயதில் அவன் முழுமையாகப் பருவமடைகிறான், எட்டு தரம் எட்டில், அறுபத்து நான்கு வயதில் இனப்பெருக்க காலம் முடிகிறது. அதனால் தான் சீனா நாட்டில், எட்டு என்ற எண் ஆணின் வாழ்க்கையைக் குறிக்கிறது. அதே போல பெண்ணின் வாழ்க்கையைக் குறிக்கும் எண் ஏழு ஆகும். ( மேலே சொன்ன மாதிரி பெண்களுக்கும் சரியா வருதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்)


Friday, June 18, 2010

யாருக்கு சொர்க்கம்? ( 18 + )


சொர்க்கத்தில் சனத்தொகை கூடி இடப் பிரச்சினை ஆகி விட்டது. அதனால், ஒரு நாள் மட்டும் பரீட்சார்த்தமாக ஒரு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. யார் ரொம்ப கஷ்டப்பட்டு மண்டையைப் போடுகிறார்களோ அவர்களை மட்டும் உள்ளே அனுமதிப்பது என்று தலைமைப் பீடம் உத்தரவு போட்டது.

வாசலில் நேர்முகம் ஆரம்பமானது. முதலில் வந்தவரிடம் கேட்கப்பட்டது, 'நீ எப்படி இங்கே வந்து சேர்ந்தாய் ?'
முதலாமவன் சொன்னான் 'அது ரொம்ப மோசமான நாள். என் மனைவியுடன் இன்னொருவனுக்கு தொடர்பு இருக்கு என்று எனக்குத் தெரியும், அன்று அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடிக்க சீக்கிரமே வீட்டுக்கு வந்து விட்டேன். வீடு முழுவதும் தேடியும் அவனைக் காணவில்லை, எங்கள் வீடு 25 ஆம் மாடியில் இருக்கு, வெளியில் வந்து பால்கனியில் எட்டிப் பார்த்தேன், வெளியில் பால்கனி விளிம்பில் பிடித்து அவன் தொங்கிக்கொண்டு இருந்தான். உடனே வீட்டுக்குள்ளே போய் சுத்தியல் எடுத்து வந்து அவன் கைகளில் போட்டேன் ஒரு போடு, கைகளை விட்டு கீழே விழுந்தான், ஆனால் அவன் பற்றைகளில் போய் விழுந்த படியால், தப்பி விட்டான், எனக்கு பொறுக்க முடியவில்லை, உள்ளே இருந்த ப்ரிட்ஜை தள்ளிக்கொண்டு பால்கனிக்கு வெளியே தள்ளி அவனுக்கு மேல் போட்டு விட்டேன். அதோடு அவனும் மண்டையை போட்டு விட்டான், இந்தத் தள்ளு முள்ளில் நானும் ஹார்ட் அட்டாக்கில் செத்து போய் விட்டேன்'
'ம்ம் இது ஒரு மோசமான சாவு தான், நீ சொர்க்கத்துக்கு போகலாம்'.
அடுத்தவனிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது.
இரண்டாமவன் சொன்னான் 'ச்சே, எவ்வளவு மோசமான நாள் அது. நான் 26 ஆவது மாடியிலுள்ள என் வீட்டின் பால்கனியில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தேன், திடீரென்று என் கால் சறுக்கி பால்கனிக்கு வெளியே விழுந்து விட்டேன், அதிர்ஷ்டவசமாக கீழே அடுத்த மாடி பால்கனியைப் பிடித்து விட்டேன், ஆனால் திடீர் என்று ஒரு மனிதன் ஓடி வந்து சுத்தியலால் என் கையில் அடித்து கீழே தள்ளி விட்டான். அப்படி விழுந்தும், நான் பற்றைகளில் விழுந்த படியால் அடி படாமல் தப்பினேன், ஆனால் அந்த மனிதன் விடவில்லை, மேலிருந்து ப்ரிட்ஜை என்மேல் போட்டு என்னை இங்கே அனுப்பி விட்டான்'
'உன் சாவு ரொம்ப மோசமாக இருக்கு, அதனால் உனக்குச் சொர்க்கம்'
மூன்றாவது ஆள் வந்தான், 'சரி நீ சொல்லு, நீ இறந்த நாள் எப்பிடி இருந்தது?'
'நான் உடைகள் இல்லாமல் ஒரு ப்ரிட்ஜுக்குள் ஒளிந்து இருந்தேன் ....'

'அடப் பாவி, அவனா நீ?.. '

Wednesday, June 16, 2010

உங்களுக்கு ஒரு லோகோ

ஒரு படம் ஓராயிரம் வார்த்தைகளுக்குச் சமமானது என்பது ஒரு பேருண்மை. எங்கள் மூளைக்கும், கருத்துக்களை விட உருவங்களை சேமிப்பதிலும் அவற்றை கையாள்வதிலும் மிகுந்த ஆற்றல் உண்டு என்பது விஞ்ஞான உண்மை ஆகும். இதை எமது வாழ்க்கை முறையிலேயே நாம் அனுபவத்தில் உணர முடியும். எமது மனதில் பதிய வைப்பதற்காகவே நிறுவனங்களில் குறியீடுகள் கவர்ச்சிகரமான, மனதில் பதியக் கூடிய உருவங்களாக உருவாக்கப்படுகின்றன. எந்த ஒரு பிரபலமான நிறுவனத்தையும் நீங்கள் மனதில் உருவகித்தால், அவற்றின் குறியீட்டு உருவமே உங்கள் மனதில் முன்னிற்கும்.
ஓவியம் என்பது உலக மொழி என்பதால், எந்த ஒரு நாட்டைச் சேர்ந்தவரும், எந்த மொழியைச் சேர்ந்தவரும், ஒரு படத்தின் கருத்தை இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும். உண்மையில், ஆதி மனிதனின் மொழியின் வரி வடிவமாக இருந்தது உருவப் படங்களேயாகும்.


Monday, June 14, 2010

மாயத் தோற்றங்கள் (கவனம்)

(இந்தப் படத்தில் அனிமேஷன் இல்லை)

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்று நம் முன்னோர்கள் சொல்லி விட்டுப் போனாலும் அதை நம்மவர்கள் கணக்கெடுப்பதில்லை. ( அதற்காக வீடியோவில் பார்த்தது பொய் என்று சொல்ல வரவில்லை) கண்ணால் நாம் காணும் காட்சிகளில் சில உண்மை அற்றவை, மூளையில் மாயத் தோற்றமாக உருவாக்கப் படுபவை என்பதைக் காட்டவே இந்தப் பதிவு.

கீழே சில மாயத் தோற்றங்களும் அவற்றின் விளக்கங்களும் உள்ளன. பார்த்து உறுதி
செய்து கொள்ளுங்கள். (படத்தின் மீது அழுத்தினால் பெரிதாகப் பார்க்கலாம்)

இதிலுள்ள இரண்டு ஆரஞ்சு வட்டங்களும் ஒரே அளவிலானவை.


Tuesday, June 8, 2010

ஆப்பிள் ஐபோன் 4


ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 4 இனை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஐபோன், நிறைய மாற்றங்களோடு புதிய வசதிகளோடு வெளிவந்துள்ளது. குறிப்பாக, எந்த விடயங்களில் முதல் தொகுதி ஐபோன் பின்தங்கி இருந்ததோ, அவற்றை எல்லாம் நிவர்த்தி செய்து கவர்ச்சிகரமாக வெளிவந்துள்ளது. பின்வரும் புதிய அம்சங்கள் ஐபோன் 4 இல் புதிதாக உள்ளடக்கப்பட்டு இருக்கிறது.

முகம் பார்த்து பேசும் வசதிஇருவர் தொலைபேசி மூலம் பேசும் போதே, ஒருவரை ஒருவர் பார்த்து பேசும் வசதி . இந்த போனில் இரண்டு காமராக்கள் உள்ளன, அவை இரண்டையும் மாற்றி மாற்றி உபயோகித்து வீடியோ உரையாடல் செய்ய முடியும். இந்த வசதி தொலைபேசி சேவை வழங்கும் நெட்வொர்க் இலும் தங்கி உள்ளது.


ரெடினா முகப்புத் திரை


இந்த ஐபோன் இல், உள்ள முகப்புத் திரையானது, முந்திய வெளியீடுகளின் முகப்புத் திரையின் துல்லியத்தை விட நான்கு மடங்கு துல்லியமானதாகும். இதனால், திரையில் உள்ள புள்ளிகளின் வேற்றுமையை மனிதக் கண்களால் கண்டுபிடிக்க முடியாது.


பல பயன்பாடுகளை ஒரே நேரத்தில் இயக்குதல்


இதற்கு முந்திய ஐபோன்களில் இருந்த பெரிய குறைபாடு, ஒரே நேரத்தில் ஒரு பயன்பாட்டை மட்டும் இயக்க முடியும் என்பதாகும். இதற்கு ஐபோன் இயங்குதளத்தில் ஒரு அப்டேட் ஐ ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. ஆனால் இந்தப் புதிய ஐபோன் 4 வெளியீட்டில் அந்த வசதி இணைக்கப்பட்டு இலகுவான முறையில் பயன்படுகளிடையே பயணிக்கும் முறைமை உள்ளடக்கப்பட்டு இருக்கிறது.


Related Posts with Thumbnails