Friday, July 16, 2010

அக்டோபஸ் - எண்காலி


உலகிலுள்ள முதுகெலும்பில்லாத உயிரினங்களிலேயே மிகவும் புத்திசாலியான சுவாரசியம் மிக்க அக்டோபஸ் பற்றி சில அறிந்திராத செய்திகளைப் பார்ப்போமா?

அக்டோபஸ் என்ற பெயரின் நேரடி அர்த்தம் எண்காலி என்றாகிறது. கணவாய்க்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறது, ஆனால் தமிழில் என்ன பெயர் என்று தெரியவில்லை, எண்காலி என்று மொழி பெயர்க்கலாம் என்று நினைக்கிறேன். சமீபத்தில் போல் என்ற பேருடைய ஒரு எண்காலி உலகக் கோப்பை முடிவுகளை முன்கூட்டியே எதிர்வு கூறிப் பிரபலமானது எல்லோருக்கும் தெரிந்திருக்கும், இந்தப் பதிவு அதைப் பற்றி அல்ல என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.

எண்காலிகள் பற்றிய முதல் சுவாரசியமான செய்தி, ஹவாய் தீவு மக்களின் பூமியின் மறு உருவாக்கம் பற்றிய கதைகளின் படி, அழிந்து போன முந்தைய உலகத்தின் ஒரே ஒரு மீதி, அதாவது இந்த உலகத்துக்கு சொந்தமில்லாத வேறு உலகத்தைச் சேர்ந்த உயிரினம் இந்த எண்காலி தான். வேற்றுக் கிரக வாசிகளின் படங்களிலும் நீங்கள் பார்த்திருக்கலாம், சில உயிரினங்கள், இந்த எண்காலி போல வடிவமைத்து இருப்பார்கள். ஏன் என்றால் அவற்றின் உருவம், பெரிய தலையும் கால்களும் மட்டும் கொண்டதாக, அதிக அறிவுத் திறனும் நிறைய வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக் கூடியதுமான தோற்றம் எண்காலிக்கு மட்டுமே இருப்பதால் தான்.



உககத்திலுள்ள எல்லா எண்காலிகளும் நச்சுத் தன்மை உடையன என்றாலும் நீல வளையங்களைக் கொண்ட எண்காலி மட்டுமே மனிதரைக் கொல்லக் கூடிய அளவு நச்சுத் தன்மையானது. இந்த அழகான எண்காலி உலகிலுள்ள மிகவும் நச்சுத் தன்மையான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் நஞ்சுக்கு மாற்று மருந்து கிடையாது என்பதும் கவனிக்கத் தக்கது. கீழே அதைப் பற்றிய ஒரு காணொளி உள்ளது. 
இவை இயல்பிலே தாக்கும் தன்மை கொண்டவை அல்ல, ஆனால் ஆபத்து நேரும் என அது கருதினால், உடனே அதை உடலில் உள்ள நீல வளையங்கள் பிரகாசமாக மாறும். அப்போது அதைத் தீண்டினால் பரலோகம் தான்.


எண்காலிகள் மிகவும் புத்திசாலிகள் என்று முதலிலேயே பார்த்தோம், இவற்றுக்கு பிரச்சினைகளைத் தீர்க்கும் திறமை, எளிதில் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் திறன் எல்லாம் இருந்தாலும், இவற்றின் ஆயுட் காலம் மிகக் குறுகியதாய் இருப்பதால் நிறையப் புதிதாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு மட்டுப்படுகிறது( இவற்றின் ஆகக் கூடிய ஆயுள் 5 வருடங்கள் மட்டுமே). இவற்றுக்கு குறுகிய கால நினைவுத் திறன், நீண்டகால நினைவுத் திறன் இரண்டும் இருப்பதால், மிக வேகமாக கற்றுக்கொள்ளுகின்றன. எண்காலிகளை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகளின் முடிவின் படி, இவற்றுக்கு உள்ள எல்லாத் திறமைகளும் இவை தம் வாழ்நாளில் கற்றுக் கொள்ளும் விடயங்களே அன்றி, எல்லா எண்காலிகளுக்கும் பொதுவாக உள்ளது என்று இல்லை. ஒவ்வொரு எண்காலியும் தனக்கு என்று தனித்துவமான வழக்கங்களை கொண்டுள்ளது.

எண்காலிகள் தமக்குள்ளே தகவல்களைத் தமது உடலின் நிறங்களை மாற்றிக் கொள்ளுவதன் மூலமே பரிமாறிக் கொள்ளுகின்றன என்று தெரிய வந்துள்ளது. இவற்றின் நிறம் மாற்றும் தன்மை உருமறைப்புக்கே முக்கியமானதாக இருந்தாலும், இந்தத் தன்மையையே அவை செய்திகளைப் பரிமாறிக் கொள்ளவும் பாவிக்கின்றன.

இவற்றின் மூளை மற்றும் நரம்புத் தொகுதி மிகவும் சிக்கலானது. மூளைச் செயற்பாடுகளைக் கையாளும் நியுறோன்களில் பெரும் பகுதி இவற்றின் கால்களின் உள்ளே உள்ள நரம்புத் தொகுதிகளில் அடங்கியுள்ளது. இந்த இயல்பு இவற்றின் கால்களின் இயக்கத்தின் முடிவெடுக்கும் திறனைத் தருவதோடு, மிகவும் சிக்கலான அசைவுகளைக் கட்டமைக்கும் திறனையும் வழங்குகிறது. எண்காலிகளுக்கு தாமாகவே விளையாடும் இயல்பும் உண்டு. இவற்றின் கூரிய அறிவுத் திறனினாலும் இவற்றின் உடலின் மென்மையான இயல்பினாலும், இவற்றை ஒரு இடத்தில் அடைத்து வைப்பது மிகவும் கடினம். முள்ளந்தண்டில்லாத விலங்குகளிலேயே இவற்றுக்கு மட்டும் உள்ள இன்னொரு இயல்பு கருவிகளைப் பயன்படுத்தும் திறன் ஆகும். தேங்காய் ஓடுகளை தமது ஒளிவிடங்களாகப் பாவிப்பதற்காக அவற்றைத் தம்முடன் எடுத்துச் சென்று பொருத்தும் திறமையைக் கொண்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.



அடுத்த சுவையான விடயம், இவற்றின் எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து தப்ப இவை பயன்படுத்தும் உத்திகள். இவற்றின் முதல் உத்தி, மறைதல், அல்லது எண்காலி போன்று தோற்றமளிக்காமல் மறைத்தல். உருமறைவு என்றும் சொல்லலாம் இவை மிகச் சிறப்பாக தமது நிறத்தை மாற்றி உறுமறைவை உண்டாக்கக் கூடியன. அடுத்த உத்தி, வேகமாக அகலுதல். இவை தம்மை உண்ண வரும் விலங்குகளில் இருந்து தப்புவதற்காக மிக வேகமாகத் தமது கால்களால் நடந்து அல்லது நீர்த்தாரை முறையில் (water jet ) நீந்தி அகலக் கூடியன. சில எண்காலிகள், தாவரம் போலத் தோற்றமளிக்கக் கூடியதாக, தனது கால்களை வைத்துக் கொண்டு இரண்டு கால்களை மட்டும் உபயோகித்து நடந்து செல்வதும் உண்டு. இதனால் கொள்ள வரும் விளங்கு இதனை எண்காலி இல்லை என தப்ப விட்டு விடும். அடுத்த உத்தியாக இவை உபயோகிப்பது, கடும் நிறமுள்ள மையைத் தம்மைச் சுற்றி பரவ விட்டுத் தப்புதல். சில வகை எண்காலிகள் பல்லி தன் வாலைக் கழற்றுவதைப் போல் தமது ஒரு காலினைக் கழற்றி தப்பித்துக் கொள்ளும். இன்னொரு வகை எண்காலி, வேறு ஆபத்தான விலங்குகள் போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கித் தப்பித்துக் கொள்ளும்.  கீழே உள்ள படத்தில், இடது பக்கம் உள்ளது எண்காலி, வலது பக்கம் உள்ளவை உண்மையிலேயே ஆபத்தான கடல் பிராணிகள்.


எண்காலிகள்  ஆராய்ச்சியாளர்களின் ஒரு விருப்பமான உயிரினமாகும். அவற்றின் புத்திசாலித்தனமும், சிறப்பியல்புகளும் அவர்களுக்கு பிரமிப்பாகவே உள்ளது. சில நாடுகளில் எண்காலிகளுக்கு சிறப்பு தராதரம் வழங்கப்பட்டு,  அவற்றுக்கு மயக்க மருந்து உபயோகித்து மட்டுமே அறுவை செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு கூட உள்ளது. இப்படி எல்லாம் இருந்தால் கூட, நிறைய இடங்களில் இதை விரும்பி உண்ணத் தான் செய்கிறார்கள். நாங்கள் உண்ணும் கணவாய் கூட இதற்கு சொந்தக்காரர் தான். ஹவாய் தீவுகளிலும், ஜப்பானிலும் இது மிகவும் பிரபலமான உணவு வகை ஆகும். சில வகை எண்காலிகளை சமைக்காமலும் சிலவற்றை உயிருடனும் கூட உண்பது உண்டு.

எண்காலி மல்யுத்தம் என்று ஒரு விளையாட்டு கூட உள்ளது. இதன் போது மல்யுத்த வீரர் நீருக்குள் மூழ்கி, ஒரு எண்காலியுடன் மோதி, அதைக் கொன்று வெளியே கொண்டு வர வேண்டும். எண்காலி கள் மிருதுவான உடலைக் கொண்டிருந்தாலும், மிக்க வலிமை கொண்டவை, அதனால் இந்த விளையாட்டு 1950 -1970 வரைக்கும் பிரபலமாக இருந்துள்ளது. இப்போது விளையாடுகிறார்களா என்று தெரியவில்லை.


எண்காலிகளைப் பற்றிய இன்னொரு விதமான கதைகளை நாம் எல்லோரும் சிறிய வயதிலேயே கேள்விப்பட்டு இருப்போம். இராட்சத எண்காலிகள் பற்றிய கதைகள் தாம் அவை. கரீபியன் கடற்கொள்ளைக்காரர்கள் என்ற படத்திலும் அப்படியான இராட்சத எண்காலியைக் காட்டி இருப்பார்கள். கடலில் நெடுந்தொலைவு பயணம் செய்வோருக்கு இந்த எண்காலி பற்றிய கதைகள் அந்தக் காலத்தில் சிம்ம சொப்பனமாக இருந்திருக்கிறது. அப்படியான ஒரு இராட்சத மிருகம் 1896 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடாவில் கரையொதுங்கி இருந்தது. அப்போது அது ஒரு இராட்சத எண்காலியாகக் கருதப்பட்டாலும், தற்போது அது ஒரு வகைத் திமிங்கிலமாக இருக்கலாம் எனக்கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது.



No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்களைப் பகிர்க நண்பர்களே

Related Posts with Thumbnails