Monday, July 19, 2010

ஜேசன் மிராயஸ் - தெள்ளிய இசை


மனித வாசம் படாத காட்டினுள்ளே தனியே நடந்து செல்லும் போது மௌனமான அந்த அமைதிக்குள் சில்வண்டுகளும் சிறு குருவிகளும் எமக்குப் பாடிக் காட்டும் இயற்கையின் கீதங்களைச் செவிமடுத்திருக்கிறீர்களா? அறுவடை முடிந்த விளைநிலங்களில் வளர்ந்திருக்கும் நாயுண்ணிப் பற்றைகளும் காவிளைப் பற்றைகளும் காற்றில் சிலுசிலுக்கும் போது வரும் ஓசையை நின்று கேட்டிருக்கிறீர்களா? பனைகளும் வடலிகளும் நிறைந்த காணிகளுக்குள்ளால் புகுந்து செல்லும் போது அந்த ஓலைகள் சரசரக்கும் போது அவை என்ன சொல்ல நினைக்கின்றன என்று யோசித்திருக்கிறீர்களா?, இழந்து விட்ட இளமைப் பருவத்தின் நினைவுகளில் உறைந்து போய் இருக்கும் நம் புழுதி படிந்த இயற்கையுடனான உறவின் எச்சங்களை நினைத்துப் பார்ப்பீர்களா? 
நகரத்தின் நெரிசல் மிக்க இயந்திர வாழ்க்கையின் அவசரத்தில் இதைப் பற்றி யோசிக்கக் கூட உங்களுக்கு இப்போது நேரமில்லாமல் இருக்கலாம். ஜேசன் மிராயஸ்(Jason Mraz) என்ற இந்தக் கலைஞன், விட்டுப் போன வாழ்க்கையின் இயல்பான தருணங்களை இயற்கையின் குரலில் மீட்டும் போது தவற விட்ட எமது கணங்களை எமக்குச் சுட்டிக் காட்டுவது போல் உணர முடிகிறது.



செக் வம்சாவளியைச் சேர்ந்த ஜேசன் மிராயஸ் அமெரிக்காவிலுள்ள வேர்ஜினியாவில் பிறந்தவர். இயற்கையோடு ஒன்றிய வாழ்வை நேசிக்கும் இவர் பச்சைக் காய்கறிகளையே முதன்மை உணவாக உண்பவர். பல்வேறு பொதுச்சேவை நிறுவனங்களில் பங்காளியாக உள்ளவர். இதற்காக விருதுகளையும் பெற்றுள்ளார். இசை 
இவரது முதல் ஒலித் தொகுப்பு 2002 ஆம் ஆண்டு வெளியானாலும் விற்பனை ரீதியில் பெரிதாக வெற்றியடையவில்லை. 2005 ஆம் ஆண்டில் வெளியான தொகுப்பு ஓரளவு வெற்றியைக் கொடுத்து அமெரிக்க அளவில் இவர் நிலையை உயர்த்தியது. 2008  ஆம் ஆண்டு வெளியான "We Sing. We Dance. We Steal Things" என்ற ஒலித் தொகுப்பே சர்வதேச அளவிலும் இணையத்திலும் மிகப் பிரபலமாக இடம் பிடித்தது. இவரது இசையின் சிறப்பே அதன் எளிமை தான். இசைக்கு மொழி இல்லை என்று நான் கருதுவதால், ஆங்கிலமாய் இருந்தாலும் அவர் பாடல்களை இங்கே பகிர்ந்துள்ளேன். அவரது பாடல்களை அவர் மேடையிற் பாடும் வீடியோ இணைப்புகள் கீழே உள்ளன, பார்த்து, கேட்டு உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.





No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்களைப் பகிர்க நண்பர்களே

Related Posts with Thumbnails