மனித வாசம் படாத காட்டினுள்ளே தனியே நடந்து செல்லும் போது மௌனமான அந்த அமைதிக்குள் சில்வண்டுகளும் சிறு குருவிகளும் எமக்குப் பாடிக் காட்டும் இயற்கையின் கீதங்களைச் செவிமடுத்திருக்கிறீர்களா? அறுவடை முடிந்த விளைநிலங்களில் வளர்ந்திருக்கும் நாயுண்ணிப் பற்றைகளும் காவிளைப் பற்றைகளும் காற்றில் சிலுசிலுக்கும் போது வரும் ஓசையை நின்று கேட்டிருக்கிறீர்களா? பனைகளும் வடலிகளும் நிறைந்த காணிகளுக்குள்ளால் புகுந்து செல்லும் போது அந்த ஓலைகள் சரசரக்கும் போது அவை என்ன சொல்ல நினைக்கின்றன என்று யோசித்திருக்கிறீர்களா?, இழந்து விட்ட இளமைப் பருவத்தின் நினைவுகளில் உறைந்து போய் இருக்கும் நம் புழுதி படிந்த இயற்கையுடனான உறவின் எச்சங்களை நினைத்துப் பார்ப்பீர்களா?
நகரத்தின் நெரிசல் மிக்க இயந்திர வாழ்க்கையின் அவசரத்தில் இதைப் பற்றி யோசிக்கக் கூட உங்களுக்கு இப்போது நேரமில்லாமல் இருக்கலாம். ஜேசன் மிராயஸ்(Jason Mraz) என்ற இந்தக் கலைஞன், விட்டுப் போன வாழ்க்கையின் இயல்பான தருணங்களை இயற்கையின் குரலில் மீட்டும் போது தவற விட்ட எமது கணங்களை எமக்குச் சுட்டிக் காட்டுவது போல் உணர முடிகிறது.