" எல்லோரும் ஒரே மாதிரி யோசிக்கிறார்கள் என்றால், அதில் சிலர் யோசிக்கவே இல்லை" இப்படி சொல்லியிருக்கிறார் ஜெனரல் ஜார்ஜ் பட்டன்.
யதார்த்தமும் அப்படித் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒவ்வொருவருக்கும் சிந்தனை என்பது வேறுபட்டால் தான் வேறு வேறு கருத்துக்கள் கிடைக்கும். அதிலிருந்து சிறந்த கருத்தைப் பெற முடியும். சிலர் தங்கள் கருத்து தான் சிறந்தது, வேறு கருத்துக்கள் கவைக்குதவாதவை என்று தீர்க்கமாகக் கருதுவார்கள்.
அதே நேரம் இன்னொரு கருத்தும் உண்டு. சிறந்தவர்கள் எல்லோரும் ஒரே மாதிரி தான் யோசிப்பார்கள் என்று. அந்தக் கருத்தை மனதில் வைத்துத் தானோ என்னவோ, சிலர் தாங்கள் நினைப்பது போல தான் எல்லோரும் நினைக்க வேண்டும் என்று ஒரு பாசிச மன நிலையுடன் இருப்பார்கள். தாங்கள் நினைப்பது சரியா தவறா என்பதைப் பற்றிக் கூட யோசிப்பதில்லை அவர்கள். இப்படியானவர்களை எங்கள் வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் காணக் கூடியதாய் இருக்கிறது.
இந்த பாசிச சிந்தனை எங்கே தோன்றுகிறது என்று பார்த்தால், ஒரு மனிதனின் முதல் சமுதாயப் படியான குடும்பத்தில் துவங்குகிறது. ஒரு விடயத்தில் முடிவெடுப்பதற்கு தந்தையும் தாயும் ஆரோக்கியமான கருத்தாடல் செய்து சிறந்த முடிவை எடுக்கும் சந்தர்ப்பத்திற்கான நிகழ்தகவு எமது சமுதாயத்தில் எந்த அளவில் உள்ளது என்பது உங்களுக்கே தெரியும். அங்கே அந்தக் குடும்பத்தின் அடுத்த தலைமுறை கற்றுக்கொள்வது தமது பெற்றோர்களின் உதாரணத்தில் இருந்து தான்.
நாம் வேலைத்தளங்களில் எதிர்நோக்கும் பாசிசம் அடுத்த வகையினது. தொழில் நிறுவனங்கள் தமது உத்தியோகபூர்வ சட்டநகல் ஒன்றை வைத்திருப்பார்கள். அது எப்படி இருக்கும் என்றால், நீங்கள் என்ன தான் பிடுங்கினாலும், அந்த நிறுவனத்தை உங்களால் என்னவும் செய்ய முடியாது, நிறுவன உரிமையாளர்கள் சொன்னால் சொன்னது தான் என்ற மாதிரியும், தங்கள் விரும்பினால் உங்களுக்கு ஏதும் போட்டுத் தரலாம் என்ற மாதிரியும் ஒரு கோப்பை உருவாக்கி, சில சட்ட வல்லுனர்களை வைத்து விளங்க முடியாத வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து உருவாக்கி இருப்பார்கள். நீங்கள் அந்த சட்ட நகலைப் பற்றி கேள்வி கேட்க முடியாதபடி அந்தச் சட்டத்திலேயே சட்டம் இருக்கும்
அடுத்து நமக்கு வாசிக்கக் கிடைக்கும் கட்டுரைகள், நூல்கள், பத்திரிகைச் செய்திகள். பொதுவாக செய்திகள் அல்லது நூல்களுடனான எமது பரிமாற்றம் ஒருவழியிலேயே நடக்கின்றது. அதாவது அவை தம் சொல்ல வந்ததை சொல்லுவதோடு நின்று விடுகின்றன. ஒரு பாடப்புத்தகத்தை வைத்து படம் நடத்தும் ஆசிரியர், அதில் மாணவர்களுக்கு உருவாகும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியும், ஆனால் ஒரு புத்தகமோ, கட்டுரையோ தன்னளவில் அந்தப் பதில்களைக் கொண்டு இருக்கும் என்று சொல்ல முடியாது. அதனால், அந்த உள்ளடக்கங்கள், தாம் சொல்ல வருவதை சில நேரங்களில் பாசிச வகையில் சொல்லி, மனிதனைக் கருத்தாடல் மூலம் தெளிய முடியாத ஒரு நிலைக்குக் கொண்டு வருகின்றன. ஆனால், இப்போதுள்ள செய்தி ஊடகங்களில் செய்திகளுடன், அவற்றுக்கான உரையாடலுக்கும் இடம் வழங்கி, செய்திகளைக் கருத்தாடலுக்கு அனுமதிக்கும் போக்கு உருவாகியுள்ளமை மிகவும் வரவேற்கத் தக்கது.
அடுத்து நமக்கு மிகவும் தெரிந்த விடயம், பாசிசம் அரசியலில் காணப்படும் தன்மை. பொதுவாக எல்லோருக்கும் அதில் இருந்து தான் பாசிசம் எனும் பதம் அறிமுகமகியிருக்கக் கூடும். ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு குழு, தாம் சிந்திப்பது போலவே எல்லோரும் சிந்திக்க வேண்டும் என நினைக்கும் போது அரசியலில் அது பாசிசமாகிறது.
பாசிச அடக்குமுறை ஒரு நாட்டோடு நின்று விடுவதில்லை, பாசிசத்தின் தலைமைப் பீடத்தின் ஆளுகை அளவுகளைப் பொறுத்து, சில நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய அளவிலும், பல நாடுகளை உள்ளடக்கி சர்வதேச அளவிலும் பாயும் வல்லமை இதற்கு உண்டு. இன்று ஜனநாயக நாடுகள் என்று கருதப்படும் பல நாடுகளில், ஆளும் கட்சியோ கூட்டணியோ, தமக்கு எதிரான கருத்து கொண்டவர்களை நசுக்கி, தமது கொள்கைகளை அல்லது அபிலாஷைகளை நடைமுறைப்படுத்துவது கண்கூடு.
ஒரு மனிதன் உனக்கு எதிரனவனாய் இருந்தால், உடல் ரீதியாக அவனைத் தோற்கடிப்பதன் மூலம் அவனை வெல்ல முடியாது, அவன் மனதைத் தோற்கடித்தால் தான் அவனை வெல்ல முடியும் என்பது ஒரு பழைய சொலவடை. இதைத் தெரிந்து கொண்டு தானோ என்னவோ இந்த அதிகார பீடங்கள், தமக்கு எதிரானவர்களை தோற்கடிப்பதில்லை அவர்களையே முடித்து விடுவார்கள்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விகிபீடியவிலிருந்து, பாசிசத்தின் வரைவிலக்கணமாக தரப்பட்டுள்ளவை,
பாசிசம் (fascism) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விதயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும். முசோலினியின் இத்தாலி, இட்லரின் ஜெர்மனி பாசிசத்திற்கு எடுத்துக்காட்டுகள்.தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும். தனியுரிமை முதலாளித்துவத்தின் தேய்ந்த நிலையே பாசிசம் எனமார்க்சியவாதிகள் அதனைக் கண்டிப்பதுண்டு. மார்க்சியவாதிகளின் இந்தக் கண்டனத்திலே உண்மை அதிகம் இருந்தபோதிலும், சில முக்கியமான விடயங்களைக் கருத்திலே கொள்ளாதிருக்கின்றது. தனியுரிமை, முதலாளித்துவம் கையாலாகாத நிலையில் பாசிசத்தைச் சரணடைகின்றது என்பது உண்மையே
இந்தக் கட்டுரையில் மேலிருந்து கீழாக, மற்றவரின் யோசிக்கும் உரிமையை, யோசிக்கும் தன்மையை மறுதலிக்கும், அவற்றை நசுக்கும் தன்மையான பாசிசம், எப்படி ஒரு தனி மனிதனின் அளவில் ஆரம்பித்து, மேலும் மேலும் வளர்ந்து ஒரு நிறுவன அளவிலும், இனத்தின் அளவிலும், ஒரு நாட்டின் அளவிலும், சர்வதேச அளவிலும் வியாபித்து உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட எத்தனித்து உள்ளேன். எந்த ஒரு மனிதனும், ஏதாவது ஒரு நிலையிலுள்ள பாசிசத்தை தன் வாழ்க்கையில் எதில் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதில் மறுப்பில்லை.
கருத்துக்கள் கருத்துக்களோடு மோதும் போது, சிறந்த கருத்துக்கள் வெல்ல வேண்டுமேயொழிய வலிமையனவர்களின் கருத்தோ, ஆயுத தாரிகளின் கருத்தோ வெல்ல வேண்டுமென்றில்லை. பிற்பகுதியின் கருத்துக்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும் என்றால், அடக்குமுறை அங்கே தொடக்கி விட்டது.
1 comment:
தேசியவாதம், விசுவாசம் என்ற போர்வையிற் தான் பாசிசம் தலையெடுக்கிறது என்பது வரலாறு. நடந்தவை திரும்பத் திரும்ப நடந்துகொண்டே இருக்கிறது. நடக்கும்.
Post a Comment
உங்கள் எண்ணங்களைப் பகிர்க நண்பர்களே